கலைத்திட்டம்

 

கலைத்திட்ட மேம்பாட்டின் இன்றைய தேவை.



கல்விப் புலத்தில் கலைத்திட்டம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை எனப்படுகின்றது. கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டம் எனலாம். முறைசார்ந்த அல்லது முறைசாரா வகையில் கல்வியை வழங்குகின்ற சகல தாபனங்களும் (பாலர் பாடசாலையாகட்டும் அல்லது பல்கலைக்கழகமாகட்டும்) தாம் வழங்குகின்ற கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பாக முறையான திட்டமொன்றைக் கொண்டிருக்க வேண்டியாதாகவுள்ளது. இத்தாபனங்களில் சேவையாற்றும் நபர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் இத்திட்டம் தொடர்பான போதுமான அறிவு, திறன்களைக் கொண்டிருக்க வேண்டியதும் மிக இன்றியமையாதாகும். அதாவது, கல்விப்புலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுகின்ற நபர்கள் கலைத்திட்டம் பற்றிய பரந்த விளக்கமொன்றை கொண்டிருப்பது அவசியமாகின்றது.

இந்த வகையில் இலங்கைப் பாடசாலைகளில் பல்வேறு பாடங்களை கற்பிக்கும் பணியில் உள்ள ஆசிரியர்களாகிய நாம், பாடசாலைகளில் அமுலாக்கப்படும் கலைத்திட்டம் தொடர்பான போதிய விளக்கங்களை கொண்டிருத்தலுடன் மாத்திரமன்றி கலைத்திட்டம் என்ற துறை தொடர்பான விளக்கங்களையும் பெற்றிருத்தல் அவசியமாகிறது. ஏனெனில் ஆசிரியர்களே, கலைத்திட்டத்தை செயற்படுத்தும் முகவர்களாக விளங்குகின்றனர். இலங்கையினைப் பொறுத்தவரையில், தேசிய ரீதியில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைகுழு போன்றவற்றின் ஒத்துழைப்புடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் திட்டமிடப்படுகின்ற கலைத்திட்டத்தை பாடசாலைகளில் செயலுருப்பெறக் காரணமாகின்றவர்கள் ஆசிரியர்களே! எனவே, இலங்கையில் நடைமுறைபடுத்தப்படும் ஆசிரிய வாண்மைபயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் கலைத்திட்டம் பற்றிய அடிப்படை எண்ணக்கருக்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மைகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் மாணவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக வெளியேற்றுவதில் பாடசாலைக் கலைத்திட்டம் முக்கிய இடத்தைவகிக்கின்றது. ஆதனால்தான் பாடசாலையில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இருபத்தோறாம் நூற்றாண்டின் சவால்களை எதிர்நோக்கக் கூடியவர்களாக இருப்பதற்கு இன்றைய பரீட்சை மையக்கல்வி முறைமையும், கலைத்திட்டத்தினை  திட்டமிட்டு அமுல்படுத்துவதில் இருக்கின்ற குறைபாடுகளும் 21ம் நூற்றாண்டின் கல்வி முறைமை சவால்களை எதிர்நோக்க முடியாமல் தடுமாறுகின்ற சூழலையும் கல்வியின் தேசிய இலக்குகளை எய்த முடியாமல் திண்டாடுவதற்கும் மிக முக்கிய காரணங்களாக உள்ளன.  அந்தவகையில் இந்த சவால்களை எதிர்கொண்டு செயற்படவேண்டிய தார்மிகப் பொறுப்பு கல்விப்புலம் சார்ந்த அனைத்துதரப்பினருக்கும் உரியது.

இன்றைய சமூக மாற்றத்தில் கல்வித்துறையின் போக்கு என்றுமில்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளப்போதும் அதன் ஒழுங்கு முறைமை உண்மையில் வினைத்திறன் விளைதிறன் உடையதா என்ற பலமான வினா இன்று எழுந்துள்ளது. இதற்குக்காரணம் இன்றைய கல்விச்சூழல் நாட்டுக்கு உகந்த பிரசையை வெற்றிகரமாகப் பெற்றுத்தந்துள்ளதா என்ற வினா எம்முன் தொக்கிநிற்பதே ஆகும். இன்றைய கல்வியுலகின் கலைத்திட்ட வடிவமைப்பிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகள் அவைதொடர்பான விமர்சனங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.  உண்மையில் ஒருவகுப்பறையில்  கற்றல் நடப்பதைக் கொண்டே ஒரு நாகரீகம் தரிப்பது தங்கியுள்ளது எனும் ரல்வ் எமல்டோ எமர்சனின் கருத்தியல் இங்கு அவதானிக்கத்தக்கது.

ஏனெனில் எமது தேசத்தில் பாடசாலையில் இருந்தே  எமது நாட்டின் உயர்ச்சி வளரும் என்னும் மார்க்வயிலின் கருத்தாகும். இதனை வலிமைப்படுத்துகின்றன. இக்கருத்து 21ம் நூற்றாண்டின் சவால்களை முறியடித்து நாளைய சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய மாணவர் படையை தயார் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு கல்விப்புலம்சார் அனைவருக்கும் உரியதென்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இவ்வகையில் கருவிபற்றிய தெளிவு அதை கையாள்பவருடைய ஆர்வமின்றி எதனையும் சாதித்து விட முடியாது. கற்பித்தல் என்பது வகுப்பறை மட்டத்திலும் சமூகமட்டத்திலும் ஏற்படுத்தும் மாற்றம் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் அரசியல், சமூகப் பொருளாதார ரீதியில் விருத்திப்பாதைக்கு இட்டுச் செல்வதோடு தேசத்திற்கும், நாட்டிற்கும் பொருத்தப்பாடுடைய கல்வியையும் வழங்குதல் வேண்டும்.

இதனால் தான் ரோபட் ப்ரொஸ்ட் “ நான் ஒரு ஆசிரியனல்லன் விழிப்புணர்வை ஏற்படுத்துபவன்” எனக் குறிப்பிடுகின்றார். பாடசாலை ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் அதற்குச் சமூகப் பொறுப்புக்கள் உண்டு. அந்தவகையில் ஒரு நிறுவனம் தனதுசெயற்பாடுகளை கட்டுறுதியுடனும் வடிவமைத்துக் கொள்வதற்கு கலைத்திட்டத்தில், இணைக்கலைத்திட்டம், மறைக்கலைத்திட்டம், மையக்கலைத்திட்டம் என்பவற்றை முறையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு தனது முகாமைத்துவப் பண்புகளை சரியாக நிதானமாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஸ்தாபன விதிக்கோவையும் , நிதிப்பிரமானங்களும் சுற்று நிருபங்களும் அர்த்த புஷ்டியுள்ளதாகத் துலங்கும்.இத்தகைய ஒரு சூழலில் தான் சட்டவாக்கங்கள் ஒரு நிறுவனத்தின் வினைத்திறனையும் விளைத்திறனையும் செவ்விதமானமுறையில் வளர்த்தெடுப்பதற்கு அடிப்படையாக அமையும் எனலாம்.



இந்த வகையில் இலங்கையில் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டம் அடிப்படையில் முறையாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும் அதனை விளங்கிகொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் இலங்கைப் பாடசாலைகள் பல்வேறு பிரச்சினைகளையும், சிக்கல்களையம் சவால்களையும், தடைகளையம் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் அகப்புற ரீதியாக எதிர்நோக்கி வருகின்றன. இதன்காரணமாக இலங்கை சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்த எதிர்நோக்குகைகள் காரணமாக இலசவக்கல்வியின் நோக்கங்கள் சிதைவதுடன் இலங்கைக்கான கல்விக் கொள்கைகளும் பல்வேறுப்பட்ட விமர்சனங்களுக்கும், சவால்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது.


எனவே இந்த நிலைகளில் இருந்து எமது தேசத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் இன்று எமது கல்வி தொழில்நுட்ப சவால்களும், வாழ்வாதாரத் தேவைகளுக்கு முகங்கொடுக்க முடியாத கல்வியாகவும் சிந்திக்கும் ஆற்றல் விருத்தியற்ற சுயமாகச் செயற்படுகின்ற ஆற்றல்களை இணைப்பாக்கம் செய்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத மனப்பாங்கற்ற வெறுமனே பரீட்சைக்கு முகங்கொடுக்கக்கூடிய  பரீட்சை வெற்றியொன்றையே இதன் மையப்படுத்தி நிற்கக் கூடிய தனது அன்றாடத் தேவைக்கு தன்னை தயார்படுத்த முடியாத பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத கல்விமுறையாக மாற்றமடைந்து வருகின்றது. 



கலைத்திட்ட மேம்பாடு என்பது நன்கு திருத்தியமைக்க உதவும் தொடர் செயற்பாடாகும். கலைத்திட்டங்களை மேம்படுத்த பல்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கலைத்திட்ட மேம்பாடு ஒரு திட்டமிடப்பட்ட நோக்கத்துடன் கூடிய தொடர்ச்சியான மற்றும் அமைப்பு அடிப்படையிலான தொடர் செயற்பாடாகும் . ஆதனால் கல்வி அமைப்பு மேம்படுத்தப்படுகிறது . இன்றைய அறிவுசார்ந்த பொருளாதாரத்தில் கலைத்திட்ட மேம்பாடு ஒரு இன்றியமையாத முக்கிய பங்கினை வகிக்கின்றது . இது போல் நமது உலகிலுள்ள பிரச்சினைகளின் அழுத்தங்களை தீர்ப்பதற்கான விடைகளையும் இது தருகின்றது. கற்போரின் சுதந்திரமான சிந்தனையையும், தொடங்காற்றலையும், தன்னம்பிக்கையையும் , தனித்தன்மையையும் , தனிவெளிப்பாட்டையும் மற்றும் செயல்பாட்டையும் உருவாக்குவதற்கு கலைத்திட்ட மேம்பாட்டின் நோக்கத்தை மிளாய்வு செய்தலும் மற்றும் கற்றல் கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தலும் கட்டாயத் தேவைகளாக இருக்கின்றன . 


'மாறுகின்ற உலகிற்கும் சமூகத்திற்கும் பொருத்தமான வகையில் கலைத்திட்டத்தில் மாற்றங்கள் இடம்பெறுவதே கலைத்திட்ட நவீனமாக்கம்' என சூஜான் டூவீஇ என்பவர் குறிப்பிடுகின்றார். நவீனமாக்கல் கற்றல், கற்பித்தல் செய்முறையுடன் இணைந்து செல்லல் வேண்டும். இச் செயன்முறை இருந்தாற்போல் இடம் பெறாது தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறு இடம்பெற்றால் அது பழைய கலைத்திட்டமாகாது. ஏற்கனவே அமுலில் இருந்து கலைத்திட்டத்தை முற்றிலும் மாற்றியமைத்தல் அல்லது மாறிவருகின்ற சமூகத்தின் தேவைகள், பிரச்சினைகள் என்பவற்றையும் நவீன தொழிநுட்ப உலகின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வகையில் கல்வி ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட விளைவுகளுக்கு ஏற்ப அமுலில் உள்ள கலைத்திட்டத்தின் சில பகுதிகளைப் புதுப்பித்தல் கலைத்திட்ட நவீனமாக்கற் செயன்முறை எனலாம்.கலைத்திட்ட நவீனமாக்கற் செயன்முறையில் பங்கெடுக்கப்பவர்கள்,ஆசிரியர் மத்திய நிலையம்,ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்விப் பீடம், பாடசாலைச் சங்கங்கள், கலைத்திட்ட நிலையம், உயர் வகுப்பு மாணவர்கள், தொழிநுட்ப முகாமையாளர் சமூகப் பொறுப்பு மிக்க பிரசைகள் என்போரைக் கொண்ட கலைத்திட்ட அபிவிருத்திச் சபை போன்றனவாகும்.

    

சமூகத்தின் கண்ணாடியாக திகழும் பாடசாலையில் முக்கியமான அம்சமாக ஆசிரியரும், கலைத்திட்டமும் காணப்படுகின்றது என்றால் அது பொய்யில்லை. நிலைத்திருக்கும் அபிவிருத்தியானது எதிர்கால சந்ததியினர்க்கு வளங்களை சேமித்தலாகும். அது போல எதிர்கால மாணவர்களுடைய சீரிய  வாழ்க்கைக்கு கலைத்திட்டம் காலத்திற்கு பொருத்தமாக அமையவேண்டும்.

1960கள் தொட்டு இலங்கை கலைத்திட்ட விருத்தியிற் பெருங் கவனங் காட்டுகிறது. கல்வி பற்றிய சிறப்புக் குழு அறிக்கையும் ( 1943) அதி பொருத்தமான கலைத்திட்டச் சீரமைப்புகளை முன்மொழிந்துள்ளது. கலைத்திட்ட விருத்தி மையத்தை நிறுவியமை கல்வித் தர உயர்வு நோக்கிய நகர்வில் ஒரு திரும்புகட்டமாகும் அவ்வேளை, இது ஆசிய நாடுகளிடையே ஒரு முன்மாதிரியாகக் காணப்பட்டது. 

சமகால உலகில், நாடுகள், உலகமயமாதலினதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களதுங் கட்டாயங்கள் உந்தும் தேசியக் கலைத்திட்டங்களைத் தழுவியுள்ளன. மேலும், மக்கள் வேலைக்காகத் தேச எல்லை கடந்து நகர்தலால், ஒப்பிடத்தக்க சான்றிதழ்களைப் பெறுமாறு அவர்கள் கட்டாயப்படுகின்றனர். சர்வதேசத் தரங்கட்கு இசைவான தேசியப் பரீட்சைகளை நடத்த வழிசெய்தது. தமது கலைத்திட்டத்தை பாடசாலைகட்குச் சுதந்திரம் இருந்த ஐக்கிய இராச்சியம் ( UK ) போன்ற நாடுகள் , 1980 ம் ஆண்டில் தேசிய கலைத்திட்டத்துக்கு மாறின , உள்ளடக்கத்திலும் தரத்திலும் தேசம் பரந்த ஒருசீர்மையை உறுதிப்படுத்துமாறு வடிவமைத்த பொதுவான கல்வி நிகழ்ச்சித்திட்டம் எனத் தேசிய கலைத்திட்டம் வரைவிலக்கணப்படும். வடிவமைக்கப் செல்வத்தை உருவாக்கலில் அறிவு அதிமுக்கிய காரணியாகியதால் உலக நாடுகள் யாவும் அறிவு - அடிப்படைச் சமூகத்தை நோக்கி நகர்கின்றன. இத் தொடர்பில், மனித வள விருத்தி உற்பத்தியின் மரபுவழி அம்சங்களை விட அதிக முக்கியம் பெற்றுள்ளது, கல்விச் சாதனையில் உயர் தரத்தை எய்தத் தேசிய கலைத்திட்டத்தைக் கொண்டிருத்தலை ஒரு மூலோபாயமாகப் பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. மேற்கிலும் கிழக்கிலும் , பெரும்பாலான விருத்திபெற்ற நாடுகள் தேசிய கலைத்திட்டத்தைத் தேர்ந்துள்ளன. காலத் தொடக்கத்திலிருந்தே இலங்கை தேசிய கலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது . 


13முன்னேறிய நாடுகளில் தேசிய கலைத்திட்டத்தோடு உள்ளடக்கஞ்சார் நியமங்களும் விருத்தியாகின்றன. இந் நியமங்கள், எல்லா மாணவர்கட்கும் பொதுவான எதிர்பார்ப்புத் தொகுதி ஒன்றை வழங்குவதன் மூலம், எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்தி உயர்த்தும் நோக்குடையன. ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான நியமங்களை விதித்தலால், நியமங்கள் மேலும் விரிவாகின்றன. பாடப்பரப்பு ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான கற்பித்தல் மூலோபாயங்களதும் தகவமைப்புக்களதும் பின்னணித் தகவல்களதும் மாதிரிகளை வழங்கும் பாடப்பரப்புக்கான கலைத்திட்டச் சட்டவரம்பை மத்திய பொறுப்பதிகாரிகள் பாடசாலைகட்கு வழங்குவர். மேலும், மத்திய மட்ட மதிப்பீடுகள் கலைத்திட்ட உள்ளடக்க நியமங்களுடன் சீரமைந்திருக்கும் . நியமங்களை விதித்த பின் , அப் பகுதிக் கல்விப் பொறுப்பதிகாரிகளும் பாடசாலைகளும் தமது கலைத்திட்டத்தையும் போதனை நிகழ்ச்சித்திட்டத்தையும் குறித்த நியமங்கட்குச் சீரமைக்கும் சுதந்திரமுடையோராவர். ஆரம்ப நிலையிற் பொதுவான ஒன்றிணைந்த கலைத்திட்டத்தைக் கொண்டு, மாணவர் கல்லூரி மட்டத்துக்குப் போவதையொட்டிப் அடிப்படையான சிறப்புப் கலைத்திட்டமொன்றுக்குப் படிப்படியாகப் நகர்வது இன்னொரு போக்காகும். ஆரம்ப ஒன்றிணைந்த கலைத்திட்டம் பரந்தளவில் மொழிகள் - தாய்மொழியும் ஒரு அயல் மொழியும் - கணிதம் , அடிப்படை விஞ்ஞானம் , சுகாதாரமும் உடற் கல்வியும், அழகியற் கல்வி ஆகியவற்றைக் கொண்டது . 



சில நாடுகள் பாடாலைகளிற் சமயக் கல்வி வழங்குகின்றன; வேறு சில அதை மத அமைப்புக்கள் வழங்குமென எதிர்பார்க்கின்றன. சிங்கப்பூர் போன்ற நாடுகள் கணிதம் , விஞ்ஞானம் போன்றவற்றிற் கூடிய கவனஞ் செலுத்துகின்றன. ஐக்கிய இராச்சியம் , அவுஸ்திரேலியா , மலேசியா , இந்தியா ஆகியன மானிடக் கல்வியும் சமூக விஞ்ஞானமும் உள்ளடங்கிய விரிவான கலைத்திட்டத்திற் கவனமுடையன. இடைநிலை மட்டத்தில் , பிரதான பாடங்களின் தொகுதியும் மாணவர்களின் ஆற்றகளில் தங்கியுள்ள பாடத்தெரிவும் உள்ளன. இவ்வகையில் இலங்கை பிற நாடுகள் பின்பற்றும் கோலத்திலிருந்து வேறுபடவில்லை. அந்தந்த மொழிகள், எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்ளும் திறன்களின் விருத்தி அறிவு வழங்கலிலும் முதன்மைபெறுகிறது. இப் போக்கு, தொழில்நுட்பச்செறிவானதொரு உலகிற் பிழைத்திருக்க, விரிந்த “21 ம் நூற்றாண்டுத் திறன்களின் "தொகுதியொன்றைப் பாடசாலைகள் மாணவர்க்கு வழங்க வேண்டுமெனக் கல்விச் சீர்திருத்தவாளர்களை வாதிடத் தூண்டியது . எனினும், இத் திறன்கள் எவையெனத் தீர்மானிப்பது சவாலானது. மென்திறன்கள், வாழ்க்கைத் திறன்கள், தொழில்வாய்ப்புத் திறன்கள், மனிதர்க்கிடையிலான திறன்கள், தொழிற்படைத் திறன்கள், புலனுணர்வுசாராத் திறன்கள் ஆதியனவாக அவை விவரிக்கப்பட்டுள்ளன. இத் தொடர்பில் , முன்னேறிய நாடுகள் பலவற்றிற் தேர்ச்சி அடிப்படைக் கலைத்திட்டங்கள் தேர்வாயப்படுகின்றன. வகுப்பறையில் தகவல் தொழில்நுட்பத்தின் வளருஞ் செல்வாக்கு மேலுமொரு போக்காகச் சுட்டப்பட்டுள்ளது. கணனிப் பாவனையும் மெய்நிகர் வகுப்பறைகளும் இணையப் பெறுவழியும் அறிவின் பெறுவழியை அடிப்படையில் மாற்றுகின்றன. முறைசார் வகுப்பறைக் கற்றலை மட்டுமன்றி வகுப்பறைக்கு வெளியே முறைசாராக் கற்றலையும் தொழில்நுட்பம் எளிதாக்குகிறது . 

தொழில் நுட்பம் என்பது இலக்கு அன்று - அது ஒரு வழிமுறை. இது பற்றிய சரியான புலக்காட்சியை ஏற்படுத்துதல் ஆசிரியரின் பொறுப்பாகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் வறிய குழலில், வளங்குன்றிய பின்புலத்தில் கணினிகள் காட்சிப் பொருள்களாகவே காணப் படுகின்றன. பெருந்தொகையான மாணவர் எண்ணிக்கையும் இடநெருக்கடியும் நிலவும் வேளை பாரம்பரியமான கற்பித்தலை முன்னெடுக்கும் செயற்பாடுகனே சவால்களுக்கு உட்படுகின்றன. இந்நிலையில் , ஒருபுறம் கல்வியில் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியும் மறுபுறம் பாரிய பின்னடைவும் " கல்விக் காலனித்துவத்தை (Educational Colonialism) ஏற்படுத்தியுள்ளன. வேகமாக முன்னேறிச் செல்வபவர்கள் பின்னடைந்தவர்களைச் சுரண்டு வதற்குரிய வாய்ப்புக்களைக் கல்விக்காலனித்துவம் ஏற்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பவளர்ச்சி ஆசிரியரது தொழிற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதேயன்றி ஆசிரியரை ஒழித்துவிட வில்லை. புதிய பரிமாணங்களுடன் செயற்பட வேண்டிய ஆசிரியருக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஆசிரியரைத் தாழ்த்தி மதிப்பிடல் தகாது. மாறாக, புதிய ஆசிரியரின் உதயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டத்தில் கணினிகளின் ஒன்றிணைப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஆசிரியரே முதன்மையான பாத்திரம் வகிக்க வேண்டியுள்ளது.




Comments